ஒரேநாளில் 5 வீடுகளில் திருட்டு


ஒரேநாளில் 5 வீடுகளில் திருட்டு
x
தினத்தந்தி 14 July 2023 12:12 AM IST (Updated: 14 July 2023 1:22 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே ஒரேநாளில் 5 வீடுகளில் பூட்டை உடைத்த மர்மநபர்கள் 2 வீடுகளில் இருந்து ஒருபவுன் நகை, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடி சென்றனர்.

வேலூர்

நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு

வேலூரை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் ஸ்ரீவத்சன், டாக்டரான இவர் வேலூர் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். ஸ்ரீவத்சன் மற்றும் அவருடைய பெற்றோர் ஒரே வளாகத்தில் தனித்தனி வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஸ்ரீவத்சன் பெற்றோர் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றனர்.

நேற்று காலை ஸ்ரீவத்சன் அந்த வீட்டை பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த ஒருபவுன் நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டு போயிருந்தது மர்மநபர்கள் நள்ளிரவில் பின்பக்கமாக சுற்றுச்சுவர் ஏறி குதித்து வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளிப்பொருட்களை திருடியது தெரிய வந்தது.

ஓய்வுப்பெற்ற வங்கி அதிகாரி

வேலூரை அடுத்த புதுவசூரை சேர்ந்தவர் குப்பன், ஓய்வுப்பெற்ற வங்கி அதிகாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் குப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவரின் உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தனர்.

வீட்டில் குப்பன் நகை, பணம் எதுவும் வைக்கவில்லை. அதனால் மர்மநபர்கள் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது. இதேபோன்று பேங்க் நகரில் பூட்டப்பட்டிருந்த டாக்டர் மிதுன், தேன்மொழி, மோகனப்பிரியா ஆகியோர் வீடுகளின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து திருட முயன்றதும் தெரிய வந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மழை பெய்ததை மர்மநபர்கள் பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து திருட்டு நடந்த வீடுகள் மற்றும் திருட்டு முயற்சி நடந்த வீடுகளின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரேநாளில் 2 வீடுகளில் திருட்டு மற்றும் 3 வீடுகளில் திருட்டு முயற்சி நடந்த சம்பவம் அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story