விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்
ுத்துப்பேட்டை ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைக்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்ய முயன்றதால் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைக்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்ய முயன்றதால் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
உண்ணாவிரதம்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வீடு கட்டும் திட்டத்தில் நடந்த முறைக்கேட்டை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி தலைமையில் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் அருகே திரண்டு வந்து தார்பாய் விரித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.அப்போது அங்குவந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதியில்லை, இதனால் இங்கிருந்து அனைவரும் கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
தள்ளுமுள்ளு
இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதன் காரணமாக போலீசாருக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை கைவிட்டுவிட்டு தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கலந்து கொண்டு புகார் தெரிவித்து கொள்ளுங்கள் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று முத்துப்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலந்து கொண்டு கலெக்டர் சாருஸ்ரீயிடம் புகார் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி கூறினார்.