ரூ.2 கோடியில் நூலகம், அறிவுசார் மைய கட்டுமான பணிகள் கலெக்டர் ஆய்வு
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியில் நூலகம், அறிவுசார் மைய பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியில் நூலகம், அறிவுசார் மைய பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அறிவுசார் மையம்
திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. பணிகளை நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த மையத்தில் போட்டித் தேர்வர்கள் அமர்ந்து படிப்பதற்கு வசதியாக விசாலமான காற்றோட்டமுள்ள அறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், கணினி மையம், மகளிர், இளைஞர்கள், பொதுமக்கள் படிப்பதற்கு தனி பிரிவு, குழந்தைகள் விளையாட்டு பிரிவு, பாதுகாப்பு தடுப்பு கம்பி, சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
வாய்ப்பாக அமையும்
இந்த நூலகம் மற்றும் அறிவுசார் மையம் ஏற்படுத்துவதன் மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் இளைஞர்கள், பொதுமக்களுக்கு அறிவுதிறன்களை மேம்படுத்தி கொள்வதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். இது அரசு வேலைவாய்ப்பிற்கு செல்லும் போட்டித் தேர்வர்களுக்கு இன்றியமையாத ஒரு வாய்ப்பாக இருக்கும். கட்டிடங்கள் தரமான முறையில் பணிகள் மேற்கொண்டு 4 மாதங்களில் பணிகளை நிறைவு செய்து நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் முருகேசன், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஷ் மற்றும் துறை அலுவலர்கள், செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.