நூலகம், கிராம சேவை மைய கட்டிடத்தில் படிக்கும் மாணவர்கள்
பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் கட்டிடம் சேதமடைந்ததால் நூலகம், கிராம சேவை மைய கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியப்பட்டு ஊராட்சியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியின் கட்டிடம் சேதமடைந்ததால் நூலகம், கிராம சேவை மைய கட்டிடத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலியப்பட்டு ஊராட்சி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்தில் பாலியப்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 1,150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் நெல், கரும்பு, மணிலா மற்றும் பூ வகைகளை பயிர் செய்வது பிரதான தொழிலாக செய்து வருகின்றனர்.
பாலியப்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கடந்த 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.
ஊராட்சியில் இந்த ஒரு அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். இந்த ஊராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் இந்த தொடக்கப்பள்ளியில் படித்தவர்களே ஆவர்.
சேதமடைந்த பள்ளி கட்டிடம்
தற்போது இந்த அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் கட்டிடங்கள் முழுவதும் சேதமடைந்து எப்பொழுது இடிந்து விழும் என்று அச்சத்திலேயே கடந்த பல ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர்.
கடந்த பல ஆண்டுகளாக பள்ளி கட்டிடத்தை சீர்செய்யாமல் இருந்து வருகிறது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கலெக்டர், பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என்றும், தற்போதுள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அல்லது வேறு இடத்தில் தரமான கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் சுமார் 77 மாணவ, மாணவிகள் மட்டுமே 1-ம்வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.
பாழடைந்து பாதுகாப்பற்ற சூழலில் உள்ள பள்ளி கட்டிடத்தில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் இயற்றி பள்ளியின் வகுப்பறைகளுக்கு பூட்டு போட்டதாக கூறப்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
மேலும் மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கப்படக்கூடாது என ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் உள்ள நூலக கட்டிடம் மற்றும் கிராம சேவை மைய கட்டிடத்தில் ஆசிரியைகள் பாடம் நடத்தி வருகின்றனர்.
பாலியப்பட்டு ஊராட்சியை சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள கோலாப்பாடி, வேடியப்பனூர், அடிஅண்ணாமலை ஆகிய கிராமங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே வரும் கல்வி ஆண்டிற்கு முன்பு தற்போது உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அல்லது வேறு இடத்தில் அரசு மூலம் தரமான மேம்படுத்தப்பட்ட புதிய கட்டிடத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளியாக செயல்பட்டு வரும் இந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி பாலியப்பட்டு ஊராட்சியில் உள்ள மாணவ, மாணவிகள் மாற்று கிராமத்திற்கு சென்று படிக்காமல் தங்கள் கிராமத்திலேயே படிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அலுவலர்கள் நேரில் ஆய்வு
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், 'பாலியப்பட்டு ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் மாணவர்கள் நூலக கட்டிடத்தில் படித்து வருவதை அறிந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த பள்ளிக்கு மாற்று கட்டிடம் அமைப்பதற்கு இடத்தை பார்வையிட்டு உள்ளனர். பள்ளி கட்டிடம் அமைப்பது தொடர்பாக அந்த கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறியப்பட்டு வருகிறது. இடம் தேர்வான பிறகு மாவட்ட கலெக்டர் மூலம் பள்ளி கட்டிடம் அமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றனர்.
முன்னாள் மாணவர்கள் குட்டி என்ற பவுன்குமார் கூறுகையில், எங்கள் ஊராட்சியில் இந்த அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஒன்று மட்டுமே உள்ளது. இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த பள்ளியை புதிதாக புனரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் உயர்நிலை வகுப்புகள் படிக்க எங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அருகில் உள்ள கோலாப்பாடி கிராமத்திற்கு செல்கின்றனர். எனவே, எங்கள் பகுதியிலேயே உயர்நிலைப்பள்ளி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
புதிய கட்டிடம்
செல்வம் கூறுகையில், தற்போது பாழடைந்துள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி எங்கள் கிராமத்தில் 60 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது. எங்கள் கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அந்த பள்ளியில் தான் தொடக்க கல்வியை படித்து உள்ளனர். தற்போது அந்த பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனால் பள்ளி மாணவர்கள் நூலக கட்டிடத்தில் படித்து வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.