கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிமம் பெற வேண்டும்
மன்னார்குடி நகராட்சியில் கழிவு நீர் அகற்றும் வாகனங்களுக்கு உரிமம் பெற வேண்டும் வேண்டும் என நகராட்சி ஆணையர் அறிவித்து உள்ளார்.
மன்னார்குடி, ஏப்.11 -
மன்னார்குடி நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நகர்ப்புற அமைப்புகளில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் கசடு மற்றும் கழிவுநீரை வாகனங்கள் மூலம் சுத்தம் செய்யும் பணிகளை ஒழுங்குபடுத்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. மன்னார்குடி நகராட்சியில் அமைந்துள்ள கசடு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கசடு மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கு வாகன உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் நகராட்சியில் உரிம கட்டணம் ரூ.2 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற வேண்டும்.மன்னார்குடி நகராட்சி மூலம் 2 ஆண்டுகளுக்கு செல்லத்தக்க வகையில் உரிமம் விண்ணப்பித்த 30 தினங்களுக்குள் வழங்கப்படும். உரிமம் பெற்ற வாகனங்களில் பணிபுரிபவர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட அறிவுறுத்தல்படி செயல்படாமல் இயங்கும் வாகனங்கள் கண்டறியப்பட்டால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.