உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து


உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து
x

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உரக்கிடங்குகளில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள், உரக்கிடங்குகளில் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது உர விற்பனையாளர்கள் உரங்களை வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்தல், உரப்பதுக்கல், உரிமம் இல்லாத உரங்களை விற்பனை செய்தல், விலைப்பட்டியல் பலகை பராமரிக்காமல் இருத்தல், அனுமதி பெறாத நிறுவனங்களிடம் உரங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்வது, விவசாயிகள் அல்லாத இதர நபர்களுக்கு விநியோகம் செய்வது மற்றும் குறிப்பாக அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்யாமல் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவதற்கு தேவையான உரங்கள் யூரியா 580 டன், டி.ஏ.பி. 796 டன், பொட்டாஷ் 349 டன், காம்ப்ளக்ஸ் 1,239 டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், 5.162 டன் யூரியா, 820 டன் டி.ஏ.பி., 416 டன் பொட்டாஷ், 475 டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 4,720 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உரிமம் ரத்து

இதுபோன்று வேளாண்மை அதிகாரிகள் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். அப்போது விதி மீறல்கள் தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையத்தின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.

மேலும் உரம் வாங்கும் விவசாயிகள் அரசு நிர்ணயித்த விலையினை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் உர விற்பனை நிலையங்களின் விவரங்களை தகுந்த ஆதாரத்துடன் தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட உர விற்பனை நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story