உரங்களுடன் கூடுதல் இணை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து
விவசாயிகள் விருப்பமின்றி உரங்களுடன் கூடுதல் இணை பொருட்கள் விற்பனை செய்தால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயிகள் விருப்பமின்றி உரங்களுடன் கூடுதல் இணை பொருட்கள் விற்பனை செய்தால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கூடுதல் இணை பொருட்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயத்திற்கு உரம் வாங்கும் போது கூடுதல் இணை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
அதைத்தொடர்ந்து அனைத்து வட்டாரங்களிலும் காலமுறை அடிப்படையில் உரம் மற்றும் பூச்சிமருந்துகள் ஆய்விற்கு பின்பே வினியோகம் செய்யும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
உர விற்பனையாளர்கள் மானிய விலை உரங்களை விற்பனை முனைய கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமாகவே, விவசாயிகளின் சாகுபடி பரப்பிற்கு தகுந்தவாறு உரங்களை பரிந்துரை செய்து விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
தேவைக்கு அதிகமான உரங்களை பரிந்துரை செய்யக்கூடாது.
விவசாயிகள் விருப்பமின்றி கூடுதல் இணை பொருட்களைக் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தெரியவந்தால் உரக்கட்டுப்பாட்டுச் சட்டம் 1985-ன் கீழ் விதிகளை மீறிய செயல்களுக்கு உர உரிமம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 206 சில்லரை உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 31 மொத்த உர விற்பனை நிலையங்கள் ஆக மொத்தம் 237 உர விற்பனை நிலையங்களில் வட்டார அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதன்அடிப்படையில் விதிகளை மீறி செயல்பட்ட 75 உர விற்பனை நிலையங்களுக்கு தற்காலிக விற்பனைத் தடை மற்றும் 17 உர விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் உர விற்பனையாளர்கள் தங்கள் உர விற்பனை நிலையங்களில் உரங்களின் விலைப்பட்டியல்கள் விவசாயிகளின் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.
அனுமதி பெறப்பட்ட நிறுவனங்களின் முதன்மைச்சான்று படிவங்கள் மேலொப்பம் பெற்று கொள்முதல் செய்து விற்பனை மேற்கொள்ள வேண்டும்.
உர மூட்டையில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.
விதிமுறைகளை பின்பற்றாமல், உரிய ஆவணங்களின்றி உரம் விற்பனை செய்தாலும், கூடுதல் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விநியோகம் செய்வது தெரியவந்தாலும் உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு குழுக்கள் அமைத்து திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இம்மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் யூரியா 1921 டன், டி.ஏ.பி. 2043 டன், பொட்டாஷ் 778 டன், சூப்பர் பாஸ்பேட் 309 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 4875 டன் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.