லாரி டிரைவரை கடத்தி கொன்ற 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை


அவினாசி அருகே மது குடிக்க பணம் இல்லாததால் ‘லிப்ட்’ கொடுப்பது போல் லாரி டிரைவரை கடத்திச்சென்று அடித்துக்கொலை செய்து அவரிடம் இருந்து செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

அவினாசி அருகே மது குடிக்க பணம் இல்லாததால் 'லிப்ட்' கொடுப்பது போல் லாரி டிரைவரை கடத்திச்சென்று அடித்துக்கொலை செய்து அவரிடம் இருந்து செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

லாரி டிரைவர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடிமுத்து நகரை சேர்ந்தவர் குமரேசன் (வயது 52). நாமக்கல்லில் உள்ள லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவர் சரக்கு ஏற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு லாரியில் சென்றுவிட்டு கேரள மாநிலம் கொச்சி செல்வதற்காக கடந்த 19-9-2018 அன்று இரவு அவினாசி பழங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது லாரியின் டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, உரிமையாளரிடம் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து உரிமையாளர் வேறு ஒரு டிரைவரை மாற்று டயருடன் அனுப்பி வைத்தார். ஆனால் குமரேசனை அங்கு காணவில்லை. லாரி மட்டும் இருந்துள்ளது. மறுநாள் அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துப்பு துலக்கினர். இந்தநிலையில் பழங்கரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு குமரேசன் பிணமாக கிடந்தார்.

மது குடிக்க பணத்துக்காக கொலை

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது அவினாசியை சேர்ந்த சங்கர் (24), அவரது நண்பரான காங்கயத்தை சேர்ந்த தீனதயாளன் (23), மற்றும் 15 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து குமரேசனை கொலை செய்தது தெரியவந்தது. 'லாரி டயர் வெடித்ததும் குமரேசன் தனது உரிமையாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சங்கர், தீனதயாளன், 15 வயது சிறுவன் ஆகியோர் மது குடிக்க பணம் இல்லாததால் வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டனர். பழங்கரை அருகே நடந்து வந்த குமரேசன், அவர்கள் 3 பேரிடமும் லாரி நிற்கும் இடத்துக்கு லிப்ட் கேட்டுள்ளார்.

3 பேரும் சேர்ந்து குமரேசனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பழங்கரை காட்டுப்பகுதிக்கு கடத்திச்சென்று அவரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் சத்தம் போட்டதும், ஏற்கனவே வைத்திருந்த இரும்பு கம்பியால் குமரேசனை தலை உள்ளிட்ட இடங்களில் அடித்து கொலை செய்து விட்டு, அவரிடம் இருந்து செல்போன், ரூ.1,500 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 பேருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. சங்கர், தீனதயாளன் இருவருக்கும் கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம், வழிப்பறி குற்றத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம், ஆள்கடத்தல் குற்றத்துக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1,000 அபராதம் விதித்தும் இதை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 வயது சிறுவன், இளம் சிறார் என்பதால் தனியாக வழக்கு நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story