உயிருக்கு சமமான பயிர்களை என்.எல்.சி. அழித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது
உயிருக்கு சமமான பயிர்களை என்.எல்.சி. அழித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சிதம்பரம்,
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று சிதம்பரம் நடராஜர் மற்றும் தில்லைக்காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து கோவில்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆன்மிகம் இல்லையென்றால், தமிழ் இல்லை. தமிழை வளர்த்ததே ஆன்மிகம்தான். ஆண்டாள் வளர்க்காத தமிழா?, நாயன்மார்கள் வளர்க்காத தமிழா?, தமிழகத்தில் தமிழை வளர்த்தவர்கள் ஆன்மிகவாதிகள் இல்லை என்பது போல தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அத்தோற்றம் மறையப்பட வேண்டும்.
ஏற்றுக்கொள்ள முடியாது
மேல்வளையமாதேவி பகுதியில் உயிருக்கு சமமான பயிர்களை என்.எல்.சி. அழித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலங்களை ஏற்கனவே கையகப்படுத்தி விட்டதாக என்.எல்.சி.யும், அதில் பயிரிடக்கூடாது என்று விவசாயிகளிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாக அமைச்சரும் கூறுகிறார்.
நிலத்தை கையகப்படுத்தியபிறகு நிர்வாக ரீதியாக 10 ஆண்டுகளாக இடைவெளியை ஏன் அனுமதித்தார்கள். பயிர்கள் வளர்க்கப்பட்டு அறுவடை முடியும் வரை நிர்வாகம் காத்திருந்து இருக்கலாம்.
பயிரிடும்போதே தடுத்திருக்கலாம்
இதில் எங்கே இடைவெளி ஏற்பட்டது என தெரியவில்லை. நிலத்தை கையகப்படுத்தியதால் விவசாயிகளிடம் முன்னதாகவே பயிர் செய்யக்கூடாது என கூறியிருக்க வேண்டும். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து ஆகும். நிர்வாக ரீதியாக அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏன் இந்த இடைவெளி இருந்தது. பயிர் வளர்ந்த பிறகு அழிப்பதை விட, பயிரிடும் போதே நிர்வாக ரீதியாக தடுத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். சிதம்பரம் கீழசன்னதியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் மருதை, மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் ராஜரத்தினம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகோபி, நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.