சேலத்தில் கட்டிட தொழிலாளியை கொன்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனை-மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு
சேலத்தில் கட்டிட தொழிலாளியை கொன்று உடலை கிணற்றில் வீசிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
கட்டிட தொழிலாளி
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் மதுசூதனன் (வயது 33), கட்டிட தொழிலாளி. கடந்த 2018-ம் ஆண்டு, இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த உறவினரான வசந்த் (28) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது மதுசூதனன் பிளேடால் வசந்தின் கழுத்தை அறுத்துவிட்டார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடையே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடிப்பகுதியில் மதுசூதனன் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த, வசந்த் மற்றும் அவருடைய நண்பர்களான நரசோதிப்பட்டியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (23), முத்துக்குமார் (24) ஆகியோர் மதுசூதனனை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவரது உடலில் கல்லை கட்டி பெருமாள் மலை அடிவாரம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் வீசினர்.
ஆயுள் தண்டனை
இந்த கொலை தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வசந்த், தட்சணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வசந்த், தட்சணாமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதம் விதித்தும் நீதிபதி கலைமதி தீர்ப்பு கூறினார்.