காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
உள்ளாட்சி தேர்தல் முன் விரோதத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
காங்கிரஸ் பிரமுகர்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 49). இவர் காங்கிரஸ் கட்சியின் ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். இவர் கடந்த 3-11-2012 அன்று கணபதிபுரம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனந்தராஜ் இதற்கு முன்பு கணபதிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வந்ததும், அதன்பின் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவரது மனைவி போட்டியிட்டு வெற்றி பெற்றதும், இதில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக கணபதிபுரத்தை சேர்ந்த இளையராஜா (39), முத்து (50), பிரகாஷ் (35), ஆசைத்தம்பி (44), திருநாவுக்கரசு (30), குட்டிமணி (39), மதி (49), கருணாநிதி (48), மார்கண்டையன் (48), திருச்சி பொன்மலை ரெயில்வே வடக்கு காலனியை சேர்ந்த பாஸ்கர் (25), திருச்சி குப்பாங்குளத்தை சேர்ந்த மதன்குமார் (26) திருச்சியை சேர்ந்த மாரியப்பன் (23) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பாபுலால் தீர்ப்பு வழங்கினார். இதில் இளையராஜா, முத்து ஆகியோருக்கு தலா 2 பிரிவுகளில் தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும், இதனை 2 பேரும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறும், பாஸ்கர், மதன்குமார், மாரியப்பன் ஆகிய 3 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மற்ற 7 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்து உத்தரவிட்டார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி வாதாடினார்.
பல்வேறு வழக்குகள் நிலுவை
இந்த வழக்கில் திறம்பட புலன்விசாரணை செய்த இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, செந்தில்மாறன், கோர்ட்டு பணி ஏட்டு பாக்கியலட்சுமி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பாஸ்கர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.