தொழிலாளி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளி கொலை வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை
x

சுமை தூக்கும் தொழிலாளி வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் முத்தழகுப்பட்டியை சேர்ந்தவர் செபஸ்தியார் (வயது 46). சுமை தூக்கும் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளி பிரகாஷ். கடந்த 2006-ம் ஆண்டு சுமை தூக்குவதில் அவர்கள் 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரகாஷ் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கைதான செபஸ்தியாருக்கு ஆயுள்தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது. பின்னர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து 2012-ம் ஆண்டு செபஸ்தியார் விடுதலையானார்.

இந்தநிலையில் பிரகாஷ் கொலைக்கு பழிக்குபழியாக கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி 10 பேர் கும்பலால் செபஸ்தியார் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுப்பட்டியை சேர்ந்த பிரகாஷின் உறவினர்கள் உள்பட 10 பேரை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

8 ஆண்டுகளாக திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட அந்தோணி விமல்ராஜ் (33), சின்னப்பன்ராஜ் (37), அருள் ஆரோக்கியதாஸ் (40), தங்கம் (62), ஜஸ்டின்தாஸ் (28), ஜான்சன் பிரபாகரன் (30), அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்த தாமரைக்கண்ணன் (29), விக்னேஷ் இன்பராஜ் (39) ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அபராதமாக விதித்து நீதிபதி சரவணன் உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் கைதான சின்னக்காளை (60), அவருடைய அக்காள் குழந்தை தெரசு (65) ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இல்லாததால் 2 பேரையும் கோர்ட்டு விடுதலை செய்தது. குழந்தை தெரசுவின் கணவர் தான், 2006-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story