சிறுமியை கடத்தி திருமணம் செய்த தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கடத்தி திருமணம் செய்த தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை கடத்தி திருமணம் செய்த தனியார் பள்ளி பஸ் டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

தனியார் பள்ளி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம், செல்லப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ராமச்சந்திரன் (வயது 35). இவர் ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அதே பள்ளியில் 14 வயது சிறுமி ஒருவர் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி சிறுமி வீட்டின் அருகே உள்ள பொது தண்ணீர் தொட்டியில் துணி துவைக்க சென்றார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன், ஆசைவார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி 14 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். மேலும் அவரை கோவை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.


Next Story