வியாபாரி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை

வியாபாரி கொலை வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வியாபாரி கொலை
திண்டுக்கல் முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவை சேர்ந்தவர் ராயப்பன். இவருடைய மகன்கள் தாமஸ் செல்வம் (வயது 41), சுரேஷ் அந்தோணி (37). ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ந்தேதி பத்மாவின் மகனும், காய்கறி வியாபாரியுமான ராஜ்குமார் (32) முத்தழகுப்பட்டியில் இருந்து திண்டுக்கல்லுக்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தார்.
தோமையார் கோவில் அருகே அவரை தாமஸ் செல்வம், சுரேஷ்அந்தோணி மற்றும் அவருடைய நண்பர்கள் அஜித்பாண்டி (35), சார்லஸ் (31) ஆகியோர் வழிமறித்தனர். பின்னர் அரிவாள், கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து ராஜ்குமாரின் அண்ணன் குமார் கொடுத்த புகாரின் பேரில், தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமஸ் செல்வம் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதில் குற்றம்சாட்டப்பட்ட தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். மேலும் அஜித்பாண்டி, சார்லஸ் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படாததால் 2 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.