மது அருந்த மறுத்த மனைவியை கொன்ற மீனவருக்கு ஆயுள் தண்டனை


மது அருந்த மறுத்த மனைவியை கொன்ற மீனவருக்கு ஆயுள் தண்டனை
x

மது அருந்த மறுத்த மனைவியை கொன்ற மீனவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

சென்னை,

சென்னை புதுவண்ணாரப்பேட்டை திடீர்நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 4-வது வகுப்பு படிக்கும் மகள், 2-வது வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான கோவிந்தராஜ், அடிக்கடி பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். மனைவியின் நடத்தை மீதும் சந்தேகப்பட்டு, அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு, ஜூலை மாதம் 17-ந் தேதி அன்று ஏற்பட்ட தகராறின்போது கோவிந்தராஜ் கட்டையால் மனைவி லட்சுமியை தாக்கி உள்ளார். அத்துடன் மது அருந்தும்படி மனைவியை கட்டாயப்படுத்தி உள்ளார். லட்சுமி மறுக்கவே அவரை அடித்துக்கொலை செய்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, கோவிந்தராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

குழந்தைகளுக்கு இழப்பீடு

நீதிபதி தனது தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

மனைவியை கொலை செய்த பின்பு தனது மகள், மகனை கோவிந்தராஜ் பராமரித்து வந்துள்ளார். தற்போது அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது அந்த குழந்தைகள் படித்து வருகின்றன. இன்னும் நீண்டகாலம் அந்த குழந்தைகள் பயணிக்க வேண்டியது உள்ளது. அந்த குழந்தைகளின் மறுவாழ்வுக்கு பொருளாதார ரீதியான உதவி தேவைப்படுகிறது. இந்த குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

எனவே, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி இந்த குழந்தைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story