மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை
திருச்சி அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருச்சி அருகே மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
மனைவி கொலை
திருச்சி மாவட்டம் முசிறி துளையாநத்தம் புதுக்காலனியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவருக்கு கோமதி என்ற பெண்ணுடன் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரமேஷ் வெளிமாநிலத்தில் தங்கி இருந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் வண்டியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கோமதி குடும்ப செலவுக்கு பணம் கேட்டு கணவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில்ஆத்திரம் அடைந்த ரமேஷ் அரிவாளால் மனைவியை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்தார். பின்னர் அரிவாளுடன் ஜம்புநாதபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று அவர் சரண் அடைந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
வாழ்நாள் சிறை
இந்த வழக்கு துறையூர் கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டு போலீஸ் தரப்பில் 6 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பர் 27-ந் தேதி முதல் இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. அரசு தரப்பு வக்கீல் அருட்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீவட்சன் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்ட ரமேசுக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, 136 நாட்களில் (4 மாதம்) முடிக்கப்பட்டு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது.