வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
முன்விரோத தகராறில் வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து பெரியகுளம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ். மின்வாரிய ஊழியர். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (36) என்ற தொழிலாளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி பாப்பம்மாள்புரத்தில் சந்தோஷ்குமார் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஆனந்தராஜ் அவரிடம் மீண்டும் தகராறு செய்தார். மேலும் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதில் நிலைகுலைந்த சந்தோஷ்குமார் உயிருக்கு போராடினார். பின்னர் அவா் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு கூறினார். அதன்படி, வாலிபரை கொலை செய்த ஆனந்தராஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் தண்டனை வழங்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டது.