தாயின் 2-வது கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


தாயின் 2-வது கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தாயின் 2-வது கணவரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.குமாரமங்கலம் காந்தி நகர் நடுத்தெருவை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60). கடந்த 23.12.2020 அன்று இரவு 9 மணிக்கு விஜயராம் (36) என்பவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அவர் அங்கிருந்த தனது தாய் வெள்ளையம்மாள் மற்றும் வெள்ளையம்மாளின் 2-வது கணவர் பாலுசாமி ஆகிய இருவரிடமும் சென்று தனது மனைவி, குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார்.

மேலும் மனைவி, குழந்தையை தன்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தனக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கும்படியும், இல்லையெனில் உங்கள் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என்று கூறி அவர்களை தகாத வார்த்தையால் திட்டியதோடு வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து பாலுசாமியின் முகத்தில் கொத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இதுகுறித்து வெள்ளையம்மாள், உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், விஜயராம் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட விஜயராமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட விஜயராம், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பிரமணியன் ஆஜரானார்.


Next Story