சிறுமியை எரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை எரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காதலை முறித்துக்கொண்டதால் சிறுமியை எரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

காதலை முறித்துக்கொண்டதால் சிறுமியை எரித்துக் கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

காதல் விவகாரம்

குமரி மாவட்டம் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவருடைய மகள் சிபானி (வயது 16). 10-ம் வகுப்பு முடித்த இவர் பள்ளிக்கு சென்று வந்த போது வெள்ளிச்சந்தை அருகே கீழ முட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்த தொழிலாளியான எவரெஸ்ட் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த காதலை அறிந்த சிபானியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறிய வயதில் காதல் அவசியமா? என அவரை கண்டித்தனர். இதனால் எவரெஸ்ட் உடனான காதலை அவர் முறித்துக் கொண்டார்.

சிறுமி எரித்துக் கொலை

ஆனால் எவரெஸ்ட் தொடர்ந்து சிபானியை காதலித்து வந்தார். மேலும், தன்னை காதலிக்கும்படி தொடர்ந்து தொந்தரவு செய்தார். ஆனால் சிபானி அதற்கு உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த எவரெஸ்ட், தன்னை காதலிக்கவில்லையென்றால் கொன்று விடுவதாக அவரை மிரட்டினார்.

இந்தநிலையில் கடந்த 25-5-2013 அன்று சிபானியும், அவரது தம்பியும் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் நுழைந்த எவரெஸ்ட் திடீரென சிபானி உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிபானி பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து எவரெஸ்ட்டை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு நாகர்கோவில் மகளிர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

அப்போது எவரெஸ்டை குற்றவாளி என தீர்மானித்து சிபானியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜோசப் ஜாய் தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லிவிங்ஸ்டன் ஆஜராகி வாதாடினார்.


Next Story