வியாபாரியை கொன்ற தம்பிக்கு ஆயுள் தண்டனை
சொத்து பிரச்சினையில் வியாபாாியை கொலை செய்த வழக்கில் அவரது தம்பிக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
சொத்து பிரச்சினையில் வியாபாாியை கொலை செய்த வழக்கில் அவரது தம்பிக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
சொத்து பிரச்சினை
சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 59). இவர் அங்கு செருப்பு கடை வைத்திருந்ததுடன் மிக்சி, கிரைண்டர் பழுது பார்க்கும் பணியும் செய்து வந்தார்.
இவரது தம்பி மொட்டையா சாமி (58). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த நிலையில் அடிக்கடி பொன்ராஜின் கடைக்கு வந்து பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள பூர்வீக சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மேலும் பொன்ராஜின் கடை மீது அவ்வப்போது கல்லெறிந்தும் தகராறு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இந்தநிலையில் கடந்த 29.11..2022 அன்று காலை மொட்டையா சாமி, பொன்ராஜ் கடைக்குள் நுழைந்து எனக்கு சொத்தை பிரித்து தர மறுக்கிறாய் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று சொல்லியபடியே பொன்ராஜை கத்தியால் குத்திய போது பொன்ராஜ் விலகினார்.
ஆனாலும் அவரது இடுப்பில் கத்திக்குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே விழுந்து ரத்த வெள்ளத்தில் அவர் பரிதாபமாக இறந்தார். அப்போது கடையில் இருந்த பொன்ராஜின் மனைவி மாரீஸ்வரியை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து விட்டு மொட்டையா சாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து மாரீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார், மொட்டையா சாமியை கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஹேமானந்தகுமார் விசாரித்து மொட்டையா சாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.