தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை
x

தொழிலாளியை கிணற்றில் தள்ளி கொன்ற என்ஜினீயருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் சுடலைமுத்து (வயது 23), கட்டிட தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஷியாம் சித்திரைவேல் (22) என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நெல்லை அருகே உள்ள இட்டேரி பகுதிக்கு வேலைக்கு வந்திருந்தனர்.

அப்போது ஒரு பெண்ணுக்கு சுடலைமுத்து காதல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக சியாம் சித்திரைவேல் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சியாம் சித்திரைவேல் சுடலைமுத்துவை அங்குள்ள கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷியாம் சித்திரைவேலை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு, குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் சித்திரைவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த முன்னீர்பள்ளம் போலீசாரை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.


Next Story