நண்பரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் பணத்தகராறில் நண்பரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
நண்பர் கொலை
திருப்பூர் டூம்லைட் மைதானம் பகுதியை சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது 24). இவர் புதுக்காடு பகுதியில் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவரும், திருப்பூர் புரோக்கர் வீதியில் உள்ள பனியன் நிறுவன தொழிலாளி மணிகண்டனும் நண்பர்கள். ஒரு மாதத்துக்கு முன்பு ஷாருக்கானுக்கு திருமணம் நடந்தபோது, மணிகண்டன் பண உதவி செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த 31-1-2021 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மதியம் வீட்டில் இருந்த ஷாருக்கானை, மணிகண்டன் வந்து அழைத்துச்சென்றார். அதன்பிறகு ஷாருக்கன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மணிகண்டன் செல்போனும் சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது.
வாலிபருக்கு ஆயுள் தண்டனை
உடனடியாக ஷாருக்கானின் குடும்பத்தினர், மணிகண்டன் வேலை செய்யும் புரோக்கர் வீதியில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு சென்று பார்த்தபோது அங்கு ஷாருக்கான் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தியதில் மணிகண்டன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது, ஏற்பட்ட தகராறில் ஷாருக்கானை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. நண்பரை அழைத்துச்சென்று கொலை செய்த குற்றத்துக்காக மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.