தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
சொத்து தகராறு
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை அடுத்த கொத்தரி கிராமத்தை சேர்ந்தவர் சோலை என்ற குடுகுடு சோலை (வயது 58). தொழிலாளி. இவரது தம்பி பெரிய கருப்பன் (46). இவர்களுக்குள் சொத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. கடந்த 12-8-2017 அன்று அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் அமர்ந்திருந்த பெரிய கருப்பனுக்கும், சோலைக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சோலை, பெரியகருப்பனை தாக்கினார்.
இதில் கீழே விழுந்த பெரிய கருப்பன் காயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி சோலை மற்றும் அவரது மகன் சோலை ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் அழகர்சாமி ஆஜர் ஆனார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சோலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் சோலை ராஜை விடுதலை செய்து உத்தரவிட்டார்.