மருமகளை வெட்டி கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை வெட்டி கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை வெட்டி கொன்ற முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் நரிக்கரடு பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி அமுதா (வயது 26). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வரும் அறிவழகன் குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார்.
இதற்கிடையில் அறிவழகன் வேலைக்கு சென்ற நேரத்தில் அமுதா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார். அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த அறிவழகனின் தந்தை பழனி (62) மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு அமுதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மகன் அறிவழகன் வீட்டில் இல்லாத போது பழனி அங்கு சென்றார்.
ஆயுள் தண்டனை
பின்னர் அவர் மருமகள் அமுதாவை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினார். இதற்கு அவர் மறுத்ததுடன் சத்தம் போட்டு கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பழனி, மருமகளை கோடாரியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக தம்மம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பழனிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.