பெட்ரோல் பங்க் ஊழியரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு


பெட்ரோல் பங்க் ஊழியரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

பெட்ரோல் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஊழியரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்

பெட்ரோல் பங்க்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிளக்கள்ளன். இவருடைய மகன்கள் ராஜூ (வயது 24), விஜி (18). இவர்களது நண்பர் கொழிஞ்சானூர் வெள்ளக்காரமேடு பகுதியை சேர்ந்த கேசவன் (20).

இவர்கள் 3 பேரும் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந்தேதி மகுடஞ்சாவடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பினர்.

சாவு

அப்போது இவர்கள் 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியர் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கோவிந்தராஜ் (27) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து தாக்கியதில் கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. பெட்ரோல் பங்க் ஊழியர் கோவிந்தராஜை அடித்துக்கொன்ற கேசவன், விஜி ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் கைதான ராஜூ ஏற்கனவே இறந்து விட்டார்.


Next Story