மீன்பிடி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மீன்பிடி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

4 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் மீன்பிடி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

4 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் மீன்பிடி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

முன்விரோதம்

கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் 13-வது அன்பியத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய கெபின் ராஜ் (வயது 31), மீனவர். இவருடைய மனைவி சகாய சிந்துஜா (26). இவர்களுக்கு 4 வயதில் ரெய்னா என்ற மகனும், 10 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

கடந்த 4 வருடத்திற்கு முன்பு ஆரோக்கிய கெபின் ராஜ், அதே ஊரை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான அந்தோணிசாமி என்பவரிடம் குடும்ப செலவிற்காக ரூ.54 ஆயிரம் கடனாக வாங்கினார்.

தொடர்ந்து பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பாக ஆரோக்கிய கெபின்ராஜிக்கும், அந்தோணிசாமிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே ஆரோக்கிய கெபின் ராஜ் லீபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்தார். அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆனால் மகன் ரெய்னா மட்டும் ஆரோக்கியபுரத்தில் உள்ள உறவினரான சந்திரா என்பவர் வீட்டில் தங்கியபடி எல்.கே.ஜி. படித்து வந்தான்.

சிறுவன் கடத்தி கொலை

இந்தநிலையில் 17.3.2019 அன்று காலை 8 மணிக்கு உறவினர் வீட்டின் முன்பு ரெய்னா விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த அந்தோணிசாமி மோட்டார் சைக்கிளில் ரெய்னாவை கடத்திச் சென்றார். உடனே இதுகுறித்து உறவினர் சந்திரா, ஆரோக்கிய கெபின் ராஜிடம் தகவல் தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசாமி மற்றும் ரெய்னாவை தேடி வந்தனர். அந்த சமயத்தில் கீழமணக்குடி பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் ரெய்னா பிணமாக கிடந்தார். முன்விரோதம் காரணமாக அந்தோணிசாமி சிறுவன் ரெய்னாவை கடத்திச் சென்று தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்தோணி சாமியை போலீசார் கைது செய்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை நாகர்கோவிலில் உள்ள முதன்மை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் லினஸ் ராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி அருள் முருகன் நேற்று அந்தோணிசாமியை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுவனை கடத்திய வழக்கில் அந்தோணிசாமிக்கு ஆயுள் தண்டனையும், சிறுவனை கொன்ற குற்றத்திற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும் மற்றும் அபராதமாக ரூ.5 ஆயிரமும் விதித்தார். மேலும் இந்த தண்டனையை அவர் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

சிறுவனை கடத்தி சென்று கொலை செய்த மீன்பிடி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story