தந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை


தந்தையை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
x

திருவாடானை அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ராமநாதபுரம்

திருவாடானை அருகே தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

அடித்து கொலை

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது மூலவயல். இந்த ஊரைச் சேர்ந்தவர் சோலை (வயது 75). இவர் தனக்கு சொந்தமான நிலத்தினை விற்பனை செய்து செலவு செய்து வந்தாராம். இதை அவரது மகன் பழனி (48) கண்டித்துள்ளார். மேலும் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த பழனி தனக்குரிய சொத்தை பிரித்து தருமாறு தந்தையிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி வீட்டிற்கு வந்த பழனி, தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த பழனி, கீழே கிடந்த கம்பால் தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த சோலை பரிதாபமாக பலியானார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து சோலையின் அண்ணன் அரசு(77) என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருவாடானை போலீசார் வழக்குபதிவு செய்து பழனியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா தந்தையை கொலை செய்த பழனிக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜரானார்.


Next Story