ஆட்டோ டிரைவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை
பெரியகுளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆட்டோ டிரைவர் கொலை
பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் சிங் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சத்யா (30). இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. ரஞ்சித்குமார்சிங் சில பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி இரவு வீட்டில் ரஞ்சித்குமார் சிங் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது சத்யா, அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர்.
மனைவிக்கு ஆயுள் தண்டனை
மேலும் இதுதொடர்பான வழக்கு பெரியகுளம் கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகினார். பல்வேறு கட்டமாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது குற்றம்சாட்டப்பட்ட சத்யாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.