வாழ்வாதாரம் பாதிப்பதாக திருப்பூர் தொழிலாளர்கள் புலம்பல்
வாழ்வாதாரம் பாதிப்பதாக திருப்பூர் தொழிலாளர்கள் புலம்பல்
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் கருவம்பாளையம் கே.வி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பனியன் நிறுவனத்தில் தொழில் செய்து வசித்து வருகிறோம். திருப்பூரில் வட இந்தியர்கள் அதிகமாக வந்ததால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வட இந்தியர்கள் இங்கு வந்து குறைந்த ஊதியத்துக்கு வேலை செய்வதால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான பனியன் நிறுனங்களின் உரிமையாளர்கள் வடமாநிலத்தவரை பணியமர்த்துகிறார்கள். அவர்களுக்கு பனியன் நிறுவன உரிமையாளர்களே தங்கும் இடம் மற்றும் சாப்பாடு இலவசம் என்று அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள். இதனால் எங்களை பணிக்கு அழைப்பது குறைந்து விட்டது.
இவ்வாறு இங்கு தங்கியுள்ள வடமாநிலத்தவர்கள் இரவுநேரத்தில் வன்முறையில் ஈடுபடுவது, எங்களை தாக்குவது, பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். எனவே வடஇந்தியர்கள் திருப்பூருக்கு வருவதற்கு கட்டுப்பாடுகளை நிர்ணயம் செய்ய வேண்டும். எங்கள் தொழில் மற்றும் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.