தர்மபுரி ரெயில் நிலையத்தில் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்ட 'லிப்ட்' பயன்பாட்டுக்கு வருவது எப்போது? பயணிகள் எதிர்பார்ப்பு
தர்மபுரி:
தர்மபுரி ரெயில் நிலையத்தில் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்ட லிப்ட் பயன்பாட்டுக்கு வருவது எப்போது? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரெயில் நிலையம்
தர்மபுரி ரெயில் நிலையம் வழியாக தினமும் 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம், ஓசூர், பெங்களூரு மார்க்கமாக பல்வேறு நகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இந்த ரெயில்கள் செல்கின்றன. தினமும் 2,000-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பயணிகளை வழியனுப்ப வரும் பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். தற்போது ரெயில்கள் அனைத்தும் 2-வது நடைமேடையில் தான் நின்று செல்கிறது.
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் வழியாக வரும் பயணிகள் முதலாவது நடைமேடையில் இருந்து நடை மேம்பாலத்தின் வழியாக தான் 2-வது நடைமேடைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஒரு சிலர் தண்டவாளத்தில் இறங்கி செல்லும் நிலையும் உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான சூழ்நிலையும் ஏற்படுகிறது.
லிப்ட் வசதி
பயணிகள் வசதிக்காக முதலாவது மற்றும் 2-வது நடைமேடைகளில் நகரும் படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று தர்மபுரி எம்.பி. டாக்டர் செந்தில்குமார் தென்மேற்கு ரெயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், முதற்கட்டமாக லிப்ட் வசதி ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.
அதன்படி முதலாவது மற்றும் 2-வது நடைமேடைகளில் ரூ.41 லட்சம் மதிப்பில் லிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் பெரும்பாலும் முடிக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த லிப்ட் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று ரெயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கோரிக்கை
மேலும் தொழில் நுட்ப கோளாறுகளை சரி செய்து, முதல் நடைமேடையில் இருந்து ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற ரெயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?...