தூத்துக்குடி மாவட்டத்தில் சாரல் மழை


தூத்துக்குடி மாவட்டத்தில் சாரல் மழை
x
தினத்தந்தி 24 Jan 2023 6:45 PM GMT (Updated: 24 Jan 2023 6:47 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டமாகவே காணப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மேலும், நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனேயே காட்சியளித்தது.

மாவட்டத்தில் திடீரென பெய்த இந்த மழை, விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் மாவட்டத்தில் மானாவாரி பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. தாமிரபரணி பாசன பகுதியில் மட்டும் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாக பிசான நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. போதுமான மழை இல்லாத காரணத்தால் மானாவாரி பயிர்களில் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு இருந்து வரும் வேளையில் பெய்த இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.


Next Story