பள்ளி கட்டிடத்தை மின்னல் தாக்கியது


பள்ளி கட்டிடத்தை மின்னல் தாக்கியது
x

எடப்பாடி அருகே பள்ளி கட்டிடத்தை மின்னல் தாக்கியது. இதில் 91 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்.

சேலம்

எடப்பாடி:-

எடப்பாடி அருகே பள்ளி கட்டிடத்தை மின்னல் தாக்கியது. இதில் 91 மாணவர்கள் உயிர் தப்பினார்கள்.

கனமழை

எடப்பாடி சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் திடீரென்று கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது எடப்பாடி அருகே சவுரிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் பள்ளி கட்டிடத்தின் மேல் தளத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும் பள்ளியில் இருந்த மின்விசிறி, விளக்குகள் உள்பட மின்சாதன பொருட்கள் அனைத்தும் கருகின. அப்போது பள்ளிக்குள் இருந்த 2 ஆசிரியைகள் மற்றும் 91 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு காயங்களும் இன்றி உயிர் தப்பினர்.

ஆய்வு

மின்னல் தாக்கிய போது ஏற்பட்ட பலத்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களின் உதவியுடன் பள்ளி ஆசிரியைகள், மாணவர்களை பத்திரமாக பள்ளி கட்டிடத்திலிருந்து வெளியேற்றி, அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளியில் எடப்பாடி தாசில்தார் லெனின் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி கட்டிடத்தின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னை மரம்

இதேபோல் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் அந்த தென்னை மரம் கண்ணிமைக்கும் நேரத்தில் வேரோடு சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.


Next Story