'மராட்டியத்தில் நடந்தது போல தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது'-இந்து முன்னணி மாநில தலைவர் பேச்சு
மராட்டியத்தில் நடந்தது போல தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.
மராட்டியத்தில் நடந்தது போல தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடக்க வாய்ப்பு உள்ளது என்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசினார்.
பிரசார பயணம்
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்துக்களின் உரிமை மீட்பு என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை நடத்தி வருகிறார். அந்த பயணத்தை கடந்த 28-ந்தேதி திருச்செந்தூரில் தொடங்கி ஜூலை 31-ந்தேதி சென்னையில் நிறைவு செய்கிறார். இந்தநிலையில், மதுரை வந்த அவருக்கு ஆரப்பாளையம் பகுதியில் வைத்து, இந்து முன்னணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக மதுரை நேதாஜி ரோடு வந்து, ஜான்சி ராணி பூங்கா பகுதியில் நடைபெற்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில், அவர் பேசியதாவது:-
கவர்னரின் ஆலோசகர்
இந்துக்களின் உரிமை மீட்பு பிரசார பயணம் நிறைவு பெறும் போது, இந்துக்களின் கோரிக்கைக்கு இந்த அரசு செவிசாய்க்கும் என நம்புகிறோம்.
கவர்னரின் ஆலோசகர் தான் தமிழக முதல்- அமைச்சர். எப்போது தி.மு.க.வினர் ஒன்றிய அரசு என்று கூறுவதை கைவிடுகிறார்களோ அப்போது தான் நாங்களும் முதல்-அமைச்சர் என்று கூறுவோம். அதுவரை அவர் கவர்னரின் ஆலோசகர் தான்.
மராட்டியத்தில் நடந்தது போல
அமைச்சர் செந்தில்பாலாஜியின் கையில் 40 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். மராட்டியத்தில் நடந்ததுபோல், தமிழகத்திலும் அரசியல் மாற்றம் நடக்க வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தில் ஆதீனங்களை மிரட்டும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. தி.மு.க.வினர் எதற்கு ஆதீனங்களை மிரட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்து பெண்களுக்கு சமஉரிமை எப்போதும் அளிக்கப்படுகிறது. ஆனால், கிறிஸ்தவ, முஸ்லிம் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படாமல் இருக்கிறது. வரும் காலம் இந்துக்களின் காலம். இது மதசார்ப்பற்ற நாடு.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாநகர் மாவட்ட தலைவர் அழகர்சாமி, மாவட்ட செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.