போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் அதிரடி கைது


போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: திருச்சி சிறப்பு முகாமில் 9 பேர் அதிரடி கைது
x

திருச்சி சிறப்பு முகாமில் 9 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் 152 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி கேரளாவை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினி, தங்க நகைகள், பென்டிரைவ், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. அப்போது சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த குணசேகரன் உள்பட 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

போதைப்பொருள் கும்பல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரள மாநிலம் விழிஞ்சியம் அரபிக்கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த மீன்பிடி படகில் இருந்து 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள், ஆயுதங் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அப்போது கைது செய்யப்பட்ட படகில் இருந்த இலங்கையை சேர்ந்த 6 பேருக்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக தான் திருச்சி சிறப்பு முகாமிற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் குணசேகரன் உள்பட 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், இவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனை நடத்திவிட்டு சென்ற மறுநாளே அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர்.

9 பேர் கைது

இந்தநிலையில் கேரள என்.ஐ.ஏ. சூப்பிரண்டு தர்மராஜ் தலைமையிலான 8 அதிகாரிகள் நேற்று காலை சிறப்பு முகாமிற்கு வந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஏற்கனவே அவர்கள் விசாரித்த இலங்கையை சேர்ந்த குணசேகரன், புஷ்பராஜ், கோட்டைகாமணி, தனுக்காரேஷன், கென்னடி பெர்னான்டோ, முகமதுஅனீஸ், திலீபன், சுரங்கா, லதியா ஆகிய 9 பேரை தனித்தனியாக அழைத்து துருவிதுருவி விசாரித்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமாரிடம் அனுமதி பெற்று 9 பேரையும் அதிரடியாக கைது செய்து திருச்சியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திருச்சி சிறப்பு முகாமில் கடந்த ஜூலை மாதம் நடந்த சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட மடிக்கணினியில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story