பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பா? தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை


பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பா? தமிழகத்தில் 8 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
x

தமிழகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 இடங்களில் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 19-ந் தேதி தடை செய்தது.

தேச விரோத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி தடை விதிக்கப்பட்டது.

கைது நடவடிக்கை

இதனையடுத்து தமிழகம் உள்பட பல இடங்களில் அந்த அமைப்பின் அலுவலகங்கள் மூடப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டன.

பயங்கரவாத அமைப்போடு தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் அந்த அமைப்பின் நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

8 இடங்களில் சோதனை

இந்தநிலையில் நேற்று தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதி புதிய காலனியைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்து வந்தார்.

இவரது வீட்டுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு 6 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென வந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அப்துல் ரசாக்கை காரில் அழைத்துச் செல்ல என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டனர். அப்போது பத்திரிகையாளர்கள் அங்கு ஏராளமானோர் குவிந்திருந்ததால் அப்துல் ரசாக்கை மோட்டார் சைக்கிள் ஓட்ட வைத்து அவரது பின்னால் மற்றொரு அதிகாரி அமர்ந்தபடி அழைத்துச் சென்றனர்.

மதுரையில் 4 இடங்கள்

இதேபோல் மதுரை நெல்பேட்டை பகுதியை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகி முகமது அப்பாஸ் என்பவரது வீட்டிற்கு நேற்று அதிகாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வந்தனர். வீட்டில் இருந்து ஆவணங்களை கைப்பற்றி அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதே போன்று தெப்பக்குளம் பகுதியில் தமிழன் தெருவில் முகமது யூசுப் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது வீட்டிலும் ஆவணங்கள், செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர்.

அதே போன்று வில்லாபுரம், பேரையூரிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கம்பத்தில் ஒருவர் கைது

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சாதிக் அலி என்பவரது வீட்டிலும் சோதனை நடந்தது.

அதிகாலை 4 மணி அளவில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. பின்னர் அங்கிருந்த 3 செல்போன்களை கைப்பற்றினர்.

இதையடுத்து சாதிக் அலியை கைது செய்து விசாரணைக்காக சென்னை தேசிய புலனாய்வு முகமைக்கு காரில் அழைத்துச் செல்ல முயன்றனர். இதற்கிடையே சாதிக் அலி வீட்டில் சோதனை நடப்பதை அறிந்த எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் அவரது வீட்டின் முன்பு கூடினர்.

பின்னர் அவர்கள், சாதிக் அலியை கைது செய்து அழைத்துச் சென்றபோது அதிகாரிகள் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக தேசிய புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் பிரியா அதற்கான ஆவணத்தை காட்டினார். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.

பழனியிலும் சோதனை

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜிநகரை சேர்ந்தவர் முகமது கைசர். இவர், பழனியில் ஓட்டல் நடத்தி வருகிறார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்தார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 பேர் மற்றும் போலீசார் 10 பேர் முகமது கைசர் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பின்பு முகமது கைசரை கைது செய்து, விசாரணைக்காக சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

திருச்சி விமான நிலையம்

இதேபோல் திருச்சி விமான நிலையத்துக்கு நேற்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் 7 பேர் திடீரென வந்தனர். பின்னர் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த தஞ்சையை சேர்ந்த முகமது அசாப் (22) என்ற பயணியை பிடித்து விசாரணை நடத்தினர்.

மேலும் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதுமட்டுமின்றி முகமது அசாப்பின் செல்போனை கைப்பற்றி ஆய்வு நடத்தினர்.

தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பா?

இவர் தஞ்சையில் இருந்து சுற்றுலா விசாவில் துபாய் சென்று அங்கு சுற்றித்திரிந்துள்ளார்.

மேலும் அவருக்கு தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா?, அவர்களுடன் பண பரிமாற்றம் ஏதேனும் நடந்துள்ளதா? என துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு மாலையில் முகமது அசாப்பை விடுவித்துவிட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

என்.ஐ.ஏ. அறிக்கை

தமிழகத்தில் 8 இடங்களில் நடைபெற்ற சோதனை தொடர்பாக டெல்லியில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள உள்ளனர்.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெற்ற சோதனையில் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் கருவிகள் கைப்பற்றப்பட்டது.

5 பேர் கைது

மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களின் விவரம் வருமாறு:-

1. அப்துல் ரசாக் (வயது 47) - திருவொற்றியூர். 2. வக்கீல் முகமது யூசுப் (35) - மதுரை. 3. முகமது அப்பாஸ் (45) - மதுரை. 4. முகமது கைசர் (45) - திண்டுக்கல் மாவட்டம் பழனி. 5. சாதிக் அலி (39) - கம்பம்.

ஏற்கனவே கைதான 10 பேர் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சட்டவிரோத மற்றும் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2047-ம் ஆண்டுக்குள் இவர்கள் இந்தியாவில் தங்களுக்காக தனி மாநிலத்தை உருவாக்க திட்டமிட்டு செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கைது எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகவும், செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story