கள்ளுக்கான தடையை நீக்கி இருந்தால்கள்ளச்சாராய உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காதுஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி
தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக கொண்டு வர பூரண மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியபோது கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு நிவாரண நிதி கொடுத்தால் அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும். தவறு செய்தது சரியானது என அரசே ஒத்துக்கொள்ளும் நிலை ஏற்படும். அது தவறானது. அதனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன நபர்களுக்கு நிவாரண நிதி வழங்க முடியாது என திட்டவட்டமாக மறுத்தார் அந்த மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார்.
ஆனால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களுக்கு உடனடியாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானம் விலை அதிகம் என்பதால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள்.
கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி இருந்தால் ரூ.50-க்குள் முடிந்திருக்கும். உடல்நிலை பாதிக்காது. உயிருக்கு ஆபத்து கிடையாது. கள்ளுக்கு உலகளவில் எங்கும் தடை கிடையாது. தமிழக அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து, கள்ளுக்கான தடையை நீக்கியிருந்தால், இதுபோன்ற கள்ளச்சாராய உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்காது..
இவ்வாறு அவர் கூறினார்.