காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்
விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்
விழுப்புரம்
மதுபாட்டில்கள் கடத்தல்
விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீதா, போலீசார் மகாராஜா, வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோர் விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை போலீசார், சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் 9 அட்டைப்பெட்டிகளில் 216 பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல்
பின்னர் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், திருவண்ணாமலை மாவட்டம் தென்னகரத்தை அடுத்த மேப்பதுரை பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 39) என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மதுபாட்டில்களை கடத்த முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து செந்திலை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள காரையும் பறிமுதல் செய்தனர்.