டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை


டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை
x

திருக்கோவிலூரில் பரபரப்பு டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் கொள்ளை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கைவரிசை

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் புறவழிச்சாலையில் இருந்து கனகநந்தல் கிராமம் செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடையின் விற்பனையாளர்கள் நேற்று முன் தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து டாஸ்மாக் கடையின் உள்ளே சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் மதுக்கடையின் இரும்பு கதவில் போடப்பட்ட பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கு மதுபாட்டில்கள் இருந்த பெட்டியை தலையில் சுமந்து சென்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற காரில் ஏற்றி கொண்டு சென்றதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் கூறும்போது, மதுபாட்டில்களை கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து துப்பு கிடைத்துள்ளது, அவர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என தெரிவித்தனர்.


Next Story