ஈரோடு திருநகர்காலனியில் டாஸ்மாக் கடையை மூட மதுபிரியர்கள் எதிர்ப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


ஈரோடு திருநகர்காலனியில் டாஸ்மாக் கடையை மூட மதுபிரியர்கள் எதிர்ப்பு  மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

டாஸ்மாக் கடையை மூட மதுபிரியர்கள் எதிர்ப்பு

ஈரோடு

ஈரோடு திருநகர்காலனியில் டாஸ்மாக் கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுபிரியர்கள் மனு கொடுத்தனர்.

தேங்காய் நார் ஆலை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திராவிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள், 'இச்சிப்பாளையம் கிராமத்தில் உள்ள தேங்காய் நார் ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் கொங்கு குலாளர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

பூந்துறையில் உள்ள பெரியகாண்டியம்மன், அண்ணன்மார் கோவில், கொங்கு குலாளர் சமுதாயத்தின் பூந்துறை நாடு குலத்துக்கு சொந்தமான கோவில் ஆகும். 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் பொதுக்கோவிலாக உள்ளது. இதனிடையே கொங்கு குலாளர் அல்லாத வேறு பிரிவு, வேறு சாதி அல்லது மதத்தில் திருமணம் செய்தால் அந்த நபரையும், குடும்பத்தையும், கோவில் வழிபாடு, உறவினர்களுடனான தொடர்பில் இருந்து முற்றிலுமாக விலக்கிவைக்கப்படுகின்றனர். இதுவரை சுமார் 70 குடும்பங்கள் இதுபோல் விலக்கிவைக்கப்பட்டுள்ளன.

இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கட்டுப்பாடு என்ற பெயரில் குடும்பங்களை ஒதுக்கிவைக்கும் நடைமுறையை தடுக்கவும், ஏற்கனவே ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள் மீண்டும் குல தெய்வ கோவில் நடவடிக்கைகளில் பங்கேற்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மதுபிரியர்கள்

ஈரோடு திருநகர் காலனி, ஜெயகோபால் வீதியை சேர்ந்த மதுபிரியர்கள் சிலர் கொடுத்திருந்த மனுவில், 'எங்கள் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடை தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

ஈரோடு மாவட்ட ரத்ததான ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கி முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சாலை இணைப்பு

சித்தோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்திருந்த மனுவில், 'புதிதாக அமைக்கப்படும் ஈரோடு-சத்தி 4 வழிச்சாலையில் இருந்து கொங்கம்பாளையம் பகுதிக்கு இணைப்பு அளிக்கப்படவில்லை. கொங்கம்பாளையத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி 4 வழிச்சாலையில் நேரடி இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.

சென்னிமலை அருகே உள்ள சென்னிமலைப்பாளையம், மாடுகட்டுப்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொடுத்திருந்த மனுவில், 'வாய்ப்பாடி கிராமத்தில் தனியார் நிறுவனம் நிலக்கரி சேமிப்புக்கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது' என்று கூறியிருந்தனர்.

வீடுகள் ஒதுக்க வேண்டும்

தாயக மக்கள் வாழ்வுரிமை மையத்தின் மாநில தலைவர் துரைராஜ் தலைமையில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் கொடுத்திருந்த மனுவில் கூறி இருந்ததாவது:-

இலங்கையில் இருந்து கடந்த 1964-ம் ஆண்டு ஸ்ரீபாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் அழைத்து வரப்பட்ட தாயகம் திரும்பிய நாங்கள் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தாயகம் திரும்பிய 562 குடும்பங்களுக்கும் ரூ.68 ஆயிரத்துக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கி, வீட்டினை பெற ஆவனம் செய்யுமாறும் அதிகாரிகள் எங்களுக்கு வீடுகள் ஒதுக்கியதை கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

185 மனுக்கள்

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி அதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முதல் -அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயா என்பவர் பாம்பு கடித்து இறந்ததை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா வழங்கினார்.

மேலும் அவர், இலங்கை தமிழர்களுக்கு உதவும் வகையில் அறச்சலூர் பகுதியை சேர்ந்த இலங்கை தமிழர்கள் முகாம் பொதுமக்கள் சார்பில் தமிழ்நாடு அரசு பொது நிவாரண நிதிக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையினையும் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹிஜான், உதவி ஆணையாளர் ஜெயராணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Related Tags :
Next Story