திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சாராய பாக்கெட்டுகள்


திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சாராய பாக்கெட்டுகள்
x

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கொட்டி கிடக்கும் சாராய பாக்கெட்டுகளை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் கொட்டி கிடக்கும் சாராய பாக்கெட்டுகளை கண்டு பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

தாலுகா அலுவலக வளாகம்

திருவண்ணாமலை அண்ணாசாலையில் பெரியார் சிலை அருகில் தாலுகா அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் வருவாய்த்துறையின் தாலுகா அலுவலகம் மட்டுமின்றி திருவண்ணாமலை கிளை சிறை, சிறார் நீதிமன்றம், சார் பதிவாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், சார் கருவூலம், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. இங்கு அலுவலக வேலை நாட்களில் பல்வேறு கோரிக்கைகளுக்காக மனு அளிக்கவும், பத்திர பதிவு செய்யவும் என பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இதனால் வேலை நாட்களில் பகல் நேரங்களில் தாலுகா அலுவலக வளாகம் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் தாலுகா அலுவலக வளாகத்தின் அருகில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையம் உள்ளது. போலீஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்களும் தாலுகா அலுவலக நுழைவு வாயில் முன்பே பெரும்பாலும் போலீசை சந்திக்க காத்து நிற்கின்றனர்.

கொட்டி கிடக்கும் சாராய பாக்கெட்

இந்த நிலையில் நேற்று தாலுகா அலுவலக வளாகத்தில் நுழைவு வாயில் அருகிலும், சார் கருவூலம் அருகிலும், சார் பதிவாளர் அலுவலகம் செல்லும் பகுதியிலும், பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம் இருந்த பகுதியிலும் காணும் இடமெல்லாமல் சாராய பாக்கெட்டுகள் கொட்டி கிடந்தன. மது பிரியர்கள் சுற்று வட்டார பகுதியில் இருந்து சாராயத்தை பாக்கெட்டுகளில் வாங்கி தாலுகா அலுவலக வளாகத்திற்குள் கொண்டு வந்து குடித்து விட்டு சாராய பாக்கெட்டுகளை அங்கேயே போட்டு விட்டு சென்று விட்டதாக தெரிகின்றது.

தாலுகா அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினர் முக்கிய அதிகாரியான தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தும் இதனை கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக தாலுகா அலுவலகம் அருகில் கிழக்கு போலீஸ் நிலையம் இருந்தும் இது போன்ற சட்ட விரோத செயல் நடைபெறுவதாகவும் அவர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை சாராயம், சாராய ஊறல் அழிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் போலீஸ் நிலையம் அருகில் கொட்டி கிடக்கும் சாராய பாக்கெட்டுகளை காணும் போது பெயரளவிலேயே அந்த பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். போலீசார் நடவடிக்கை கடுமையாக இருந்தால் மக்கள் அதிகளவில் வந்து செல்லும், அதுவும் போலீஸ் நிலையம் அருகில் உள்ள தாலுகா அலுவலக வளாகத்தில் இதுபோன்ற செயல் நடைபெறுமா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பி உள்ளனர்.

திருவண்ணாமலை டவுன் பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், காவல் துறையின் உயர் அதிகாரிகளும் முறையாக கவனம் செலுத்தி திருவண்ணாமலை டவுன் பகுதியில் சாராய ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். மேலும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் தாலுகா அலுவலக வளாகத்தில் கிடக்கும் சாராய பாக்கெட்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story