ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்பனை: பழைய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியீடு பரப்பியவர்கள் யார்? போலீசார் விசாரணை


ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்பனை: பழைய வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியீடு பரப்பியவர்கள் யார்? போலீசார் விசாரணை
x

ஆத்தூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் பழைய வீடியோக்களை வெளியிட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

ஆத்தூர்:

சாராயம் விற்பனை

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்து பலர் உயிரிழந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் சாராய தடுப்பு வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் ஆத்தூர், வீரகனூர் பகுதியில் சாராயம் விறபனை செய்யப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதையடுத்து அந்த வீடியோவில் சாராய விற்பனையில் ஈடுபடுவோர் குறித்து ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சாராய விற்பனையில் ஈடுபட்டது கெங்கவல்லி அருகே உள்ள புனல்வாசல் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் மகன் குமரேசன் (வயது 38) என்பது தெரியவந்தது. இதையடுத்து கெங்கவல்லி போலீசார் அவரை நேற்று கைது செய்தனர். மேலும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

பழைய வீடியோ

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் கூறியதாவது:-

சாராயம் விற்பனை செய்வது போன்று சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் சாரயம் விற்றவர் குமரேசன் என்று கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதாவது நேற்று முன்தினம் வெளியான வீடியோவில் அவர் தாடி இல்லாமல் இருப்பதும், நேற்று கைது செய்யும் போது 10 நாட்கள் வளர்ந்த தாடியுடன் அவர் இருப்பதும் தெரிந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வீடியோ மிக பழமையானது என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை பரப்பியவர்கள் யார்? என்ன காரணத்துக்காக பரப்பினார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story