சாராய விற்பனை, மணல் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டும் குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
பேரணாம்பட்டு பகுதியில் சாராய விற்பனை, மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பேரணாம்பட்டு பகுதியில் சாராய விற்பனை, மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
பேரணாம்பட்டு தாலுகா விவசாயிகள் குறைவு தீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-
சாராயம், மணல் கடத்தல்
பேரணாம்பட்டு ஏரியிலும், கொட்டாற்றிலும் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. மசிகம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்கப்படுவதால், சாராயத்தைக் குடித்து விட்டு வருபவர்கள் அந்த வழியாகச் செல்லும் பஸ்களில் ஏறி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்த்திட மசிகம் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிறுத்தப்படக்கூடாது, என வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதால் மசிகம் கிராமத்தில் அரசு பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பக்கத்து கிராமத்திற்கு சிரமப்பட்டு நடந்து சென்று பஸ்களில் ஏறி பயணம் செய்கிறார்கள். எனவே சாராய விற்பனைைய போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பத்தலபல்லி, மதினாப்பல்லி மலட்டாற்றில் தொடர்ந்து மணல் கடத்தப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கிறது. எனவே மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.
இழப்பீடு வழங்க வேண்டும்
வேளாண்மைத்துறை சார்பில் கலைஞர் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு வரக்கூடிய நல திட்டங்களான தென்னங்கன்று கொடுத்தால் மண் வெட்டி, கடப்பாரை கொடுப்பதில்லை. அதேபோல் உரம் கொடுத்தால் இடுப்பொருட்கள் கொடுப்பதில்லை. எல்லோருக்கும் எல்லாவற்றையும் தர வேண்டும். வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது. அதற்குரிய இழப்பீடு தொகைைய உடனடியாக வழங்க வேண்டும்.
விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்துக்கு ஏன் அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை? அடுத்த கூட்டத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும்.
மேற்கண்டவாறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசினார்கள்.