குளிர்பான கடைகள் தொடங்க உரிமம் பெற வேண்டும்
கோடை காலத்தில் குளிர்பான கடைகள் தொடங்க உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் குளிர்பான கடைகள் தொடங்க உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோடை காலம்
கோடை காலம் தொடங்கி விட்டதால், பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் மற்றும் குடிநீர் உள்ளிட்ட திரவ ஆகாரங்களின் தேவை அதிகரித்து விட்டது.
இந்த தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புஅதிகம் உள்ளது.
கோடைகால குளிர்பான கடைகள் வைத்து விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
உணவு பாதுகாப்பு உரிமம்
அதன்படி அனைத்து வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழை பெற்ற பின்னரே, விற்பனையை தொடங்க வேண்டும். பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ உணவுகளை தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.
உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பி.எல். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.
கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
தயாரிப்பு தேதி, காலாவதி நாள்
திரவ உணவுகளை திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. குளிர்பானங்களுக்கு உணவுத் தர 'ஐஸ் கட்டியை'மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவுத்தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி 'நீல நிறத்திலும்' இருக்கும். ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா? என உரிமையாளர் உறுதி செய்ய வேண்டும்.
நுகர்வோர் கடையில் திரவ உணவு பொருட்களை வாங்கும் போது, கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா?என்பதை உறுதி செய்ய வேண்டும். திறந்த நிலையில் உள்ள திரவ உணவுகளை நுகர்வோர் தவிர்க்க வேண்டும். பொட்டலமிடப்பட்ட குளிர்பானங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி நாள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உள்ளதா? என்பதை கவனித்து வாங்க வேண்டும்.
புகார் தெரிவிக்கலாம்
நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப்பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால், 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கும் மற்றும் கலெக்டர் அலுவலகத்தின் 9150057408 என்ற செல்போன் எண்ணுக்கும் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.