வைக்கோல் ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோவில் மது கடத்தல்
வேளாங்கண்ணி அருகே நூதன முறையில் வைக்கோல் ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோவில் மது கடத்தி செல்லப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த தனிப்படை போலீசார், ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேளாங்கண்ணி அருகே நூதன முறையில் வைக்கோல் ஏற்றிச் சென்ற சரக்கு ஆட்டோவில் மது கடத்தி செல்லப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்த தனிப்படை போலீசார், ரூ.2½ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மது கடத்தல்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளிமாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் குற்றங்கள் அதிக அளவில் நடந்து வந்தது. இதனால் கிராம பகுதிகளில் படுஜோராக சாராய விற்பனை நடந்து வந்தது. இதனை கண்காணித்து, மது குற்றங்களை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 10 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டன.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, வேளாங்கண்ணி அருகே ெசருதூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கிடமாக வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். பின்னர் டிரைவரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், சரக்கு வாகனத்தில் ஏறி வைக்கோலை பிரித்து பார்த்து போது, அதற்குள் பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், சரக்கு ஆட்டோவில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ரூ.2½ லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
விசாரணையில் அவர்கள், தலைஞாயிறை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 35), சந்தோஷ்குமார் (27) என்பதும், இவர்கள் போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வைக்கோல் ஏற்றிக் செல்வது போல காரைக்காலில் இருந்து ரூ.2½லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபாட்டில்களுடன் சரக்கு ஆட்டோவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து ராமகிருஷ்ணன், சந்தோஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.