லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல்
பேரணாம்பட்டு பகுதியில் லாரி டியூப்களில் பதுக்கி வைத்திருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பேரணாம்பட்டு டவுன் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமானுஜம், சபாரத்தினம், ஆனந்தன் மற்றும் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். அப்போது ரமாபாய் நகரைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமகிருஷ்ணன் என்பவர் மோட்டார் சைக்கிளில் 2 லாரி டியூப்களில் சாராயம் கடத்தி வந்தார். அவர் போலீசாரை கண்டதும் தப்பியோடி தலைமறைவானார். போலீசார் மோட்டார் சைக்கிள் மற்றும் 2 லாரி டியூப்களில் இருந்த 65 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு டவுன் கோவில் வீதியைச் சேர்ந்த பிரேம் என்கிற பிரேம்குமார் என்பவர் வீட்டில் லாரி டியூப்களில் சாராயம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தததையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது பிரேம்குமார் தப்பியோடிவிட்டார். அங்கு 11 லாரி டியூப்களில் இருந்த 220 லிட்டர் சாராயத்தை போலீசார் கைப்பற்றி அழித்தனர். இது சம்மந்தமாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ராமகிருஷ்ணன், பிரேம்குமார் ஆகியோரை வலை வீசி தேடி வருகின்றனர்.