விஜயதசமியையொட்டி அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி


தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் விஜயதசமியை பண்டிகையை ஒட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் விஜயதசமியை பண்டிகையை ஒட்டி குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

விஜயதசமி

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நாடு முழுவதும் உற்சாகமாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி எனப்படும் 9 திருநாட்களின் இறுதியில், 9-வது நாள் ஆயுத பூஜையாகவும், 10-வது நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருநாட்களை தமிழக மக்கள் மற்றும் இந்தியாவில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடனும், பக்தியுடனும் கொண்டாடுவது வழக்கம்.

இதன்படி ஊட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அய்யப்பன் கோவிலில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நேற்று காலை முதல் ஏராளமான பெற்றோர், தங்களது குழந்தைகளின் கல்வி பயணத்தை தொடங்கி வைத்தனர்.

எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி

இதன்படி தங்க மோதிரத்தால் குழந்தைகளின் நாவில் ஓம் என்று அர்ச்சவர் கோவிந்தன் நம்பூதிரி எழுதினார். இதையடுத்து தட்டில் நிரப்பப்பட்ட அரிசியில் குழந்தைகளின் விரலை பிடித்து பெற்றோர் ஓம் என எழுதினர். அய்யப்பன் கோவிலில் நேற்று நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடந்தது.

கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் ஜெயமாக முடியும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். இதேபோல் நேற்று புதிதாக தொழில் தொடங்குபவர்கள் வாகனம் வாங்கியவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டினர்.இதேபோல் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் அனுப்பி மகிழ்ந்தனர்.

கோத்தகிரி

விஜயதசமியன்று தொடங்கும் எந்தவொரு செயலும் சிறந்த வெற்றியைத் தரும் என்பது நம்பிக்கை. அந்த தினத்தில், குழந்தைகள் தங்களது கல்விப் பயணத்தை தொடங்கும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெற்றது. இந்த எழுத்தறிவித்தல் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கெடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு கல்வியைத் தொடக்கி வைத்தனர். கோவில் நம்பூதிரி குழந்தையின் சுட்டு விரலை பிடித்து, தட்டில் உள்ள அரிசியின் மேல் தங்கள் தாய் மொழியின் எழுத்தை எழுத வைத்தார். பின்னர் தங்கத்தாலான எழுத்தாணி கொண்டு, குழந்தையின் நாவில் எழுதினார். இதேபோல கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளிகளிலும் குழந்தைகள் பங்கேற்ற எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story