கருங்கல்பாளையம் சந்தையில் சிவப்பு கந்திரி இன பசுமாடு ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை
கருங்கல்பாளையம் சந்தையில் சிவப்பு கந்திரி இன பசுமாடு ஒன்று ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
கருங்கல்பாளையம் சந்தையில் சிவப்பு கந்திரி இன பசுமாடு ஒன்று ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
கன்றுக்குட்டி
தமிழகத்தில் மிகப்பெரிய மாட்டுச்சந்தையாக ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரத்தில் 2 நாட்கள் சந்தை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு வந்தன. இவைகள் ஒன்று ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மாட்டுச்சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம், மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 450 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 650 மாடுகள் கொண்டு வரப்பட்டன.
ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனை
இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் விற்பனை ஆனது. நாட்டு மாட்டு இனமான சிவப்பு கந்திரி பசுமாடு ஒன்று ரூ.75 ஆயிரத்துக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மாடுகள் வாங்க வந்திருந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றிச்சென்றனர்.
இதுகுறித்து சந்தை நிர்வாகிகள் கூறும்போது, 'வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பசுந்தீவனம் குறைந்துவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் அதிக அளவில் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர். இன்று (அதாவது நேற்று) கூடிய சந்தையில் 85 சதவீத மாடுகள் விற்பனை ஆனது. வெயிலின் தாக்கம் அதிகரித்தால் வரும் வாரங்களில் இன்னும் அதிகமான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.