சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் வேலூர் வந்த கல்லீரல்


சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் வேலூர் வந்த கல்லீரல்
x

மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் வேலூருக்கு கொண்டு வரப்பட்டு நாராயணி மருத்துவமனையில் கூலித்தொழிலாளிக்கு டாக்டர்கள் பொருத்தினர்.

வேலூர்

வேலூர்,

மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட கல்லீரல் சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் வேலூருக்கு கொண்டு வரப்பட்டு நாராயணி மருத்துவமனையில் கூலித்தொழிலாளிக்கு டாக்டர்கள் பொருத்தினர்.

மூளைச்சாவு

சென்னையை சேர்ந்தவர் ரபி (வயது 41). இவர் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு மூளைச்சாவு அடைந்தார். பின்னர் அவரது சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், கண், இதய வால்வுகள் தானமாக அளிக்கப்பட்டது.

இதில் கல்லீரல் வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேலத்தை சேர்ந்த பழனிச்சாமி (48) என்பவருக்கு பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதனை தொடர்ந்து கல்லீரலை பெட்டகத்தில் ஏற்றிய ஆம்புலன்ஸ் நேற்று காலை 9.49 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

கல்லீரல் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்னே போலீஸ் பாதுகாப்பு வாகனமும், மற்றொரு ஆம்புலன்சும் வந்தன.

வேலூர் நாராயணி மருத்துவமனைக்கு வந்த கல்லீரலை மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி மற்றும் மருத்துவ குழுவினர் பெற்றனர். இதையடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

டாக்டர்கள் சாதனை

இது குறித்து மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

வேலூர் நாராயணி மருத்துவமனையில் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்குச நவீன அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை இந்த மருத்துவமனையில் 38 பேருக்கு சிறுநீரகங்கள் மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல் முறையாக இன்று (நேற்று) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

8 மணி நேரம் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆபரேஷன் நடந்தது. இதில் 6 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் ஈடுபட்டனர். இந்த அறுவை சிகிச்சை, மருத்துவமனைக்கு மேலும் ஒரு மைல் கல் ஆகும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பழனிசாமி ஏழ்மையான கூலிதொழிலாளி. இவருக்கு இந்த சிகிச்சை செய்வதற்கு ரூ.25 லட்சம் செலவாகி உள்ளது. இதில் 80 சதவீத தொகையை நாராயணி பீட அறக்கட்டளை வழங்கி உள்ளது. மேலும் 4 பேருக்கு இலவசமாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய சக்தி அம்மா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அடுத்த பணியாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன் மூலம் ஏழைகள் எளிதில் பயன்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, நாராயணி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் தமிழரசி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் கீதா இனியன், டாக்டர் மோகன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.



Next Story