அரசு பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி
கன்னிவாடி அருகே அரசு பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் பல்லி விழுந்தது. இதனால் 25 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள வீரப்புடையான்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 25 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்துணவில் நேற்று புளியோதரை, தக்காளிசாதம், முட்டை வழங்கப்பட்டது. அனைத்து மாணவ-மாணவிகளும் சாப்பிட்டு கொண்டிருந்தனர். இதில் மாணவி தர்ஷினிக்கு வழங்கப்பட்ட புளியோதரையில் பல்லி ஒன்று இறந்து கிடந்தது. இதனைக்கண்டு அனைத்து மாணவ-மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தாங்கள் சாப்பிடுவதை பாதியிலேயே நிறுத்தி விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அனைத்து மாணவ-மாணவிகளும் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லமுத்து தலைமையில் சுகாதார ஆய்வாளர் கோபால் மற்றும் பணியாளர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை பெற்ற குழந்தைகளை ரெட்டியார்சத்திரம் ஒன்றியக்குழு தலைவர் சிவ குருசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வேதா, கன்னிவாடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி சண்முகம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டனர். சிகிச்சைக்கு பிறகு மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர். கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சுரேஷ் பொன்ராம் விசாரணை நடத்தி வருகிறார்.