லோடு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதல்; போக்குவரத்து பாதிப்பு
தட்டார்மடம் அருகே லோடு ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே கேட்டவிளை புதூரை சேர்ந்தவர் ஜோசப். இவர் லோடு ஆட்டோவில் தர்பூசணி பழங்களை ஏற்றிக் கொண்டு தட்டார்மடத்திலிருந்து திசையன்விளை சென்று கொண்டிருந்தார். வழியில் தட்டார்மடம் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு ஆட்டோவை வெளியே ஓட்டி வந்துள்ளார். அப்போது திசையன்விளையை சேர்ந்த வியாபாரி செல்வகுமார், திசையன்விளையில் இருந்து பிராய்லர் கோழிகளை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தட்டார்மடம் நோக்கி வந்தார். பெட்ரோல் பங்க் அருகில் இரண்டு லோடு ஆட்டோக்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இரண்டு லோடு ஆட்டோக்களும் சாலைஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தன. இதனால் தர்பூசணி பழங்கள் ரோட்டில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆட்டோவில் இருந்த 2 டிரைவர்களும் லேசான காயங்களுடன் தப்பினர்.தகவல் அறிந்த தட்டார்மடம் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, ஆட்டோக்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்து குறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.